×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை அக்.9ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை வருகிற அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது. இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2023-2024ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக்கோரிக்கையினை நிதி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர்கள் அறிமுகம் செய்வார்கள்.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அது நடைமுறைக்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் எல்லா கட்சியினரும் பேசி இருக்கிறார்கள். ஏன் என்றால், அந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று சொன்னால் ஏற்கனவே 2008ம் ஆண்டும் மற்றும் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியை தொடர்ந்து மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். 2014ம் ஆண்டு இந்த முயற்சியை பாஜ அரசு எடுத்திருந்தால் 100 சதவீதம் வரும் என்று நம்பலாம். இப்போது, தேர்தல் வரப்போகிறது. அதற்கு முன்னால் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று சொன்னால் எப்படி நம்புவது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு ஒரே கையெழுத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கொடுத்துள்ளார். இப்போது மகளிருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, பலரும் சொல்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும்.

மகளிர் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறவர்களே, மசோதாவை இப்போது நிறைவேற்ற முடியாது என்று அவர்களே தெளிவுபடுத்துகிறார்கள். இன்னும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை. 2027ம் ஆண்டுக்கு பிறகுதான் எடுப்பது போல சொல்கிறார்கள், எப்போது எடுப்பார்கள் என்று தெரியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களை மறுவரையறை செய்ய வேண்டும் என்கிறார்கள். இதுபோன்று எதற்கு செய்கிறார்கள் என்று யாருக்கு தெரியும். வெளிப்படைத்தன்மையோடு, நாங்கள் இப்படி செய்யப்போகிறோம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.

அவர்கள் நேற்று முன்தினம் மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக, புதிய நாடாளுமன்றத்தில் பிரச்னையை இல்லாமல் இருக்கும் என்பதற்காக இதை கொண்டு வந்திருப்பார்களோ என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பற்றி எல்லாம் பேசி முடிந்துவிட்டது. திரும்ப கோரிக்கை வைக்க மாட்டார்கள். அக்டோபர் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும்போது, அன்றைய தினம் அலுவல் ஆய்வு குழு கூடி இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் இருக்கிறார். அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றக்கூடிய ஒரு உரிமை இருந்தது. அதில் கவர்னர் தலையிட்ட உடனே நீதிமன்றம் போனார்கள். உச்ச நீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு தான் முழு உரிமை இருக்கிறது என்று சொன்னது. அமைச்சரவையிடம் இருந்த உரிமையை கவர்னருக்கு கொடுப்பதற்காக ஒரு மசோதா ெகாண்டு வந்து நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றினார்கள். அசூர வேகத்தில் அதை நிறைவேற்றினார்கள்.

அதேபோல, மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றலாமே. இந்த மசோதாவுக்கு எல்லாருடைய ஆதரவும் இருக்கிறது. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவுடன் நிறைவேற்றி, அதே வேகத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றி இருக்கலாம். அவர்களுடைய (பாஜ) திட்டம் எது என்று நமக்கு தெரியாது. சிம்லாவில் நடந்த சபாநாயகர் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் நான் போயிருந்தேன். ஆளுநருக்கு மாநில சட்டமன்றம் அனுப்புகின்ற அல்லது அமைச்சரவை அனுப்புகின்ற கடிதங்களுக்கு எவ்வளவு காலத்திற்குள் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற காலவரையறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். கவர்னருக்கும் எங்களுக்கும் இணக்கமாக சூழ்நிலை நிலவுகிறது.

அவர் ஆளுநர், இது மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடுகின்ற இடம். ஒரு ஆளுநர், அமைச்சரவை கூடி முடிவு எடுக்கிற மசோதாக்கள் அல்லது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டும்தான் அவருடைய பணி. இதுபற்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக இருக்கிறது. அதில் சில மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. நாட்டில், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஆட்சி நடக்கிறது. அதை ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

* ஜனாதிபதியை புறக்கணித்தது ஏன்?
நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டங்களில் இந்திய நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியை அழைத்துதான் அந்த கூட்டத்தை நடத்துவார்கள். ஜனாதிபதியை, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கும் அழைக்கவில்லை. நேற்று முன்தினம் நடந்த கூட்டு குழு கூட்டத்துக்கும் ஜனாதிபதியை அழைக்கவில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிற பழைய கட்டிடத்தில் நிறைவு விழா காலையில் நடத்திவிட்டு, புதிய கட்டிடத்திற்கு வருகிறார்கள். நிறைவு விழாவுக்கும் அழைக்கவில்லை. புதிய கட்டிடத்திற்கும் அழைக்கவில்லை. அதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கும், உங்களுக்கும் வெளிப்படையாக தெரியவில்லை. நம்ம என்ன நினைக்கிறோம், நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியை வைத்துதான் எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்களை என்ன நோக்கத்திற்காக புறக்கணிக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. அந்த அம்மா (ஜனாதிபதி), தாழ்த்தப்பட்ட பெண்மணி என்பதால் அவரை புறக்கணிக்கிறார்கள் என்று பத்திரிகைகளில்தான் செய்தியாக வருகிறதை நான் பார்க்கிறேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை அக்.9ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislation ,Speaker ,Abu ,Chennai ,Chief Secretariat ,Abdha Notice ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி